ஊராட்சி ஒன்றியம்

பாரத்ப்பீடியா இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்திய நிர்வாக அமைப்பில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகள் (ஊதா நிறத்தில்)

பஞ்சாயத்து ஒன்றியம் அல்லது ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union or Block Development Office), இந்தியாவின், தமிழ்நாட்டில், 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின்படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டன.[1][2]ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கிராம ஊராட்சிகள் இயங்குகின்றன.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12,524 கிராம ஊராட்சிகளும் உள்ளன.[3] அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், விழுப்புரம் மாவட்டம் அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.[4]

ஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி விரிவாக்க அலுவலர்கள், மேலாளர், கணக்காளர் மற்றும் உதவியாளர்கள் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவர்.

ஊராட்சி ஒன்றியங்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை[5], மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் வழிகாட்டுதல்களின் படி இயங்குகிறது.[6]

ஊராட்சி ஒன்றியக் குழுவின் அமைப்பு[தொகு | மூலத்தைத் தொகு]

கிராம ஊராட்சிகள் அடிப்படையில் ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்[தொகு | மூலத்தைத் தொகு]

ஊராட்சி ஒன்றியத்தின் அன்றாட நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (இயக்குதல்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (கணக்குகள்), பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர், சமூகக் கல்வி மற்றும் மக்கள் தொடர்பு விரிவாக்க அலுவலர், மேலாளர், அலுவலக கண்காணிப்பாளர், கணக்காளர் மற்றும் கிராம நல அலுவலர்களால் இயங்கும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தால் நிர்வாகிக்கப்படுகிறது.[7]

பணிகள்[தொகு | மூலத்தைத் தொகு]

தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம், ஆண்டு 1994, பிரிவு 112, பஞ்சாயத்து ஒன்றியத்தின் கடமைகளும் பணிகளும் வரையறுத்துள்ளது. அவைகளில் சில;

  1. பஞ்சாயத்து ஒன்றியத்தின் சாலைகள் கட்டுமானம், பராமரிப்பு & மராமத்துப் பணிகள் மேற்கொள்தல்.
  2. குடிக்க, குளிக்க, வெளுக்க தேவையான நீர் வினியோக கட்டுமானப் பணிகள் மேற்கொள்தல்.
  3. ஆரம்ப & நடுநிலைப் பள்ளிக்கூடங்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல்
  4. பொதுச் சந்தைகள் கட்டுதல் மற்றும் அதை பராமரித்தல்
  5. இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கிராமப்புறத் திட்டங்களை நிறைவேற்றுதல்.
  6. மலேரியா மற்றும் காலரா போன்ற தொற்று நோய்களை பரவாமல் தடுத்தல் மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தல்.
  7. ஊராட்சி மன்றங்களின் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்தல்.

நிதி ஆதாரங்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

பஞ்சாயத்து ஒன்றியங்கள் எவ்வித வரியை பொதுமக்களிடமிருந்து வசூலிக்க இயலாது. எனவே வரியற்ற சில கட்டணங்கள் வசூலிக்கிறது. அவைகள்;

  • வணிக நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம், சந்தைக் கட்டணம், அபராதக் கட்டணம் மற்றும் வாடகை வருவாய்.
  • தமிழ்நாடு அரசிடமிருந்து ஒதுக்கப்பட்ட மற்றும் பகிர்வு வருவாய் (Assigned & shared revenues): தமிழ்நாடு அரசு வசூலிக்கும் முத்திரைக் கட்டணம் மற்றும் கேளிக்கை வரி மீதான கூடுதல் வரிகளில் (Surcharge) ஒரு பங்கு பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு, மானியங்கள் வழங்கல் விதிகளின் படி, மாநில அரசு நிதி வழங்குகிறது. சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்களிலிருந்து தமிழ்நாடு அரசிற்கு வரும் வருவாயில் ஐம்பது விழுக்காட்டுத் தொகையை, பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
மானியங்கள்

பஞ்சாயத்து ஒன்றியப் பகுதிகளில், மகப்பேறு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கத் தேவையான நிதிக்கு, தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு வழங்கும் மானியத் தொகைகளை, தமிழ்நாடு அரசின் மாநில நிதிக் குழு (State Finance Commission) பஞ்சாயத்து ஒன்றியங்களுக்கு வழங்குகிறது.

செலவிடும் அதிகாரம்[தொகு | மூலத்தைத் தொகு]

பஞ்சாயத்து ஒன்றியக் குழுவிற்கு, ஒரு பணியை நிறைவேற்ற, அதிக பட்சமாக ரூபாய் பத்து இலட்சம் வரை ஒன்றியத்தின் பொது நிதியிலிருந்து செலவு செய்து கொள்ள அதிகாரம் உள்ளது. இதற்கு மேலிட அனுமதி தேவையில்லை.

ரூபாய் பத்து இலட்சம் முதல் 50 இலட்சம் முடிய செலவினங்களுக்கு, மாவட்ட ஆட்சியரியன் அனுமதியும், 50 இலட்சத்திற்கு மேற்பட்ட செலவினங்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (Rural development and Pachayat raj Department) இயக்குனரின் அனுமதி தேவை. இருப்பினும் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் திட்ட ஒதுக்கீடு நிதிகளை செலவிட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும்.

இதனையும் காண்க[தொகு | மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்[தொகு | மூலத்தைத் தொகு]

வார்ப்புரு:மேற்கோள்பட்டியல்

வெளி இணைப்புகள்[தொகு | மூலத்தைத் தொகு]

"https://ta.bharatpedia.org/index.php?title=ஊராட்சி_ஒன்றியம்&oldid=16621" இருந்து மீள்விக்கப்பட்டது